எழுதியவர்

வினிதா மோகன்

வெளியிட்டது

எழிலினி

வகை

ஐஎஸ்பிஎன்

9789387681620

விளக்கம்

'கர்ஜனை' தந்திரப் பின்னல்களைத் தகர்த்தெறியும் சிறுகதைகளின் தொகுப்பு.

உங்கள் நண்பர்களோடு பகிருங்கள்:

புத்தகம் வாங்க

நீங்கள் இந்த புத்தகத்தைப் படிக்கிறீர்கள் என்பதை மக்களுக்குத் தெரியப்படுத்துங்கள்

வினிதா மோகன்

எழுத்தாளர் பற்றி: திருமதி வினிதா மோகன் கரூர் மண்ணின் புதல்வி, பி.எஸ்.ஸி. பட்டம் பெற்றவர், பள்ளி, கல்லூரி நாட்களில் வாழ்வில் ““தனித்தடம்"” பதிக்கவேண்டும் என்ற கனவுடன் வலம் வந்தவர். சமூகத்தின் மீதான அக்கறையையும் அப்போதே வளர்த்துக்கொண்டவர். இன்று ஒரு சிறந்த இல்லத்தரசி, வளர்ந்துவரும் தொழிலதீபர், கவனம் ஈர்க்கும் ரோட்டரி நண்பர், 2018-2019ஆம் ஆண்டில் ரோட்டரி மாவட்டம் 300௦ இல் மாவட்ட உதவி ஆளுனராகச் சிறப்பாகப் பணியாற்றியவர், பிலிப்பைன்ஸ், தாய்லாந்து, மாலத்தீவு, சிங்கப்பூர் முதலிய நாடுகளுக்குச் சென்று வந்தவர். நூல் வாசிப்பு இவரது சுவாசம்; மக்கள் சேவை இவரது நேசம்..

அறிமுகம்:
மாதிரி பக்கங்கள்:
பொருளடக்கம்:
கூடுதல் மற்றும் துணைப் பொருள்:
இங்கே கிளிக் செய்க

பதிவுகள் இல்லை

Vinitha Mohan19-Nov-2023 09:43:34
பகுத்தறிவும். கற்பனையுமே மனிதனை விலங்கிலிருந்து வேறுபடுத்துகின்ற சிறப்புக் குணங்கள். நாள்தோறும் வளர்ந்துகொண்டே இருப்பதுதான் அறிவு. யாரால் சொல்லப்பட்டாலும் அதன் மெய்ப்பொருள் காணும் திறனையே அறிவு என்கிறோம். பிறந்த குழந்தையைப் பார்த்துவிட்டு வந்த பின் தீட்டென்று குளிப்பது பழைய நம்பிக்கை. குழந்தையைப் பார்க்கவே குளித்துவிட்டுச் செல்வதே அறிவான செயலென அறிவுறுத்தித் துவங்குகின்றன வினிதா மோகனின் கதைகள்.

வளரிளம் பருவத்தின் பால் சார்ந்த உந்துதல்கள். அதன் தப்பிதங்கள், எதிர் பாலினம் மீதான வெறுப்புகள், பயங்கள் இவைகள் ஏற்படுத்தும் வாழ்கைப்போக்கு மாற்றங்கள் பற்றிய அகத்தினியனின் கதை. இரு நடுவயதினரிடையேயான முதிர்ந்த உரையாடலாக அமைந்துள்ள விதம் சிறப்பு. மானுடரின் அடிப்படை இச்சையான பாலியல் விருப்புகளைப் பதின்ம வயதினர் எதிர்கொள்வது எப்படி என்றும். அதை உன்னதப்படுத்தி உயர்நோக்கச் செயல்களாக்கிக் கொள்வது எப்படி என்றும் அருமையாகக் கூறும் கதை பாடநூலில் இடம் பிடிக்கும் தரம் உடையது.

தம்மிடையே உள்ள திறன் குறைந்தவர்களையும். குறைபாடுகள் கொண்டவர்களையும், ஒரு சமூகம் நன்றாக நடத்தும் விதமே அச்சமூகத்தின் மேப்பட்ட தரத்தின் ஒரு குறியீடு. அர்த்தநாரீஸ்வரியின் அக்கறை. அர்த்தநாரிகள் மீதான நூலாசிரியரின் கவனம் போற்றுதற்குறியது. நம் கோவில்களில் சுத்தம் குறைந்த நிலையைக் கண்ணுரும் வினிதா மோகனின் அழகுணர்வு பதற்றம் கொள்கிறது. நம் மரபை மறுக்காமல் அதைக் காலத்திற்கேற்ப நவீனப்படுத்தும். தூய்மை வேண்டும் உந்துதலை நமக்கு மடைமாற்றம் செய்யும் நூலாசிரியரின் அழகு மனம் ஒரு கோவில்தான்.

கொரோனா காலகட்டத்தை நம் சமூகம் எதிர்கொண்ட விதத்தை. அந்நோய் பற்றிய நுண் விவரங்களை, சிகிச்கை முறைகளை. புள்ளி விவரங்களை வராலற்றில் பதிவு செய்து வைக்கிறார் நூலாசிரியர் தன் மூன்று கதைகள் மூலமாகச் சேவையில் இன்புறுகிறார். பிறர் பசிப்பிணி நீக்குவதில் களிப்படைகிறான் இளைஞன் ஒருவன். தன் அறிவைப் பயன்படுத்திச் சுரண்டாமல், எளிய மனிதர்கள் மீது அன்பும். அக்கறையும் கொள்கிறான் அவன். தன் தாத்தாவின் சொற்களை மனதில் கொண்டு. சேவை மையம் துவக்கி, அதற்காக விருதுகள் பெறும் அந்த மானுட நேசம் கொண்டவனின் கதையைப் படித்து என் அகம் மகிழ்ந்தது.

கொரோனா முதல் அலை துவங்கும்போதே நோய்த் தொற்று ஏற்பட்ட இளம் செவிலி மகிழ்வெண்பா, தன் ஏழ்மைக் கவலை. திருமணக் கவலை. நோயின் சிரமங்கள் ஆகியவற்றை திறனுடன் எதிர்கொண்டு ஆனந்தமாய் டிக்டாக்கில் பதிவுகள் போடுகிறாள். மகிழ்ச்சி என்பது சூழல் சார்ந்தது அல்ல அவரவர் மனநிலை சார்ந்தது என்று அவள் மூலமாக அறிவிக்கிறார் நூலாசிரியர்.

கொரோனாவில் தன் தந்தை இறந்து விடுகிறார். இறுதிச் சடங்குகளை நிறைவாகச் செய்ய இயலாத சமூகச்சூழல் அவளுக்கு வருத்தம் தருகிறது ஆயினும் தன் தந்தையின் கனவுகளுக்கு உயிர் கொடுப்பதுதான் அவருக்குத் தான் செய்கிற சிறப்பான இறுதி மரியாதை என உணரும் மகள் அவர் எழுதிவைத்துச் சென்ற நூல்களைப் பதிப்பித்து நிறைவடைகிறார். படிக்கும் எம் வாசக உள்ளமும் நிறைகிறது.

சாதி அடுக்குகள் மீதான தன் கோபத்தை இரு கதைகள் மூலம் பறைசாற்றுகிறார் நூலாசிரியர் வினிதாமோகன். கொங்கு வேளாளர் திருமணவிழா. எழுதிங்கள் சீர்விழா பற்றிய நுண்விவரணைகளுடன் செல்கிறது முதல் கதை. தர்க்கமனம் கொண்ட யாழினி. கேள்விகளாய்க் கேட்க மரபின் முகமாய் நின்று அருமையாய்ப் பதிலுரைக்கிறார் அருமைக்காரர் பெரியப்பா. தொல்காப்பியத்தில் கற்பியல் மேற்கோள்களைக் காட்டி. ஈரோட்டறிஞர். கல்வெட்டு ஆய்வாளர் செ. ராசு அவர்களின் நூலாதாரங்களைக் கொண்டு. சீருடன் வாழவே நம் சீர்கள் என்று விளக்குகிற பொன்னுசாமி பெரியப்பாவுக்கு எம் வணக்கங்கள் உரித்தாகுக. ஆயினும் கூட இந்த சாதிசார்ந்த சடங்குகள். சாதிக்கொரு நீதியென நிலைநாட்டுகிற நோய்க்கூறுகளாக உள்ளனவே சரிதானா? என யாழினியாய் மனச்சோர்வும் கொள்கிறார் நூலாசிரியர். பெண்களைச் சமையலறைக்குள் ஒடுக்குவதையும். தலித்துகளைச் சேரிக்குள் ஒடுக்குவதையும் ஒப்பிட்டு அடுக்குமுறை அதிகாரங்களைச் சாடுகிறார் வினிதா மோகன். சாதிமதமில்லாதவர் என்று எல்லோரும் பெருமையுடன் சான்றிதழ் கோர வேண்டும் என்கிற அவரின் கனவு மெய்ப்படுக.

சூழலியல் சார்ந்த, இயற்கையைப் பேணுகிற வாழ்வு வேண்டும் என்று நெறியுறுத்தும் கதையில் காடு ஆள்பவனுக்கு குவரன் என்று பெயர் சூட்டியது சிறப்பு. மழை வடிவில் இறைத்தூதனைக் காணும் ஒப்புமை அழகு. கானகத்துப் பறவைகளின் சுருதியும். லயமும் நம் காதுகளுக்குள் ரீங்காரமிடச் செய்கின்றன நூலாசிரியரின் வர்ணனைகள். காலமாற்றத்தில். இயற்கையின் நேசன்களை நாம் புத்தி பேதலிக்கச் செய்து விடுகிறோமே கடவுளே!!!. மரணித்த முல்லைநாதனைப் பார்க்கும்போது செந்தூரனுடன் சேர்ந்து நமக்கும் கண்கள் கலங்கிவிடுகின்றன.

பூப்படைவதைக் கொண்டாடும் ருதுமங்களச்சீர் கதையிலும் அந்த நிகழ்வு பற்றிய வர்ணனைகளைப் பாங்குடன் பதிவு செய்கிறார் நூலாசிரியர். தெரட்டி. மனை. குடிசை கட்டுதல் போன்ற வட்டார வழக்குச் சொல்லாடல்கள் சிறப்பு. தாய்மாமனின் உரிமைகள், கன்னித்தீட்டு போன்ற விவரணைகளைச் சொல்பவர். இந்தச்சடங்கு தேவைதானா? என்று உரக்கக் குரலெழுப்புகிறார். பெண்களின் சமத்துவம், சுதந்திரம் போன்றவை இன்னும் பேச்சளவிலேயே உள்ளன என்றும், செயல்பாட்டுக்கு வரும் நாளை எதிர்நோக்கிய கனவுடனும் கதையை நிறைவு செய்கிறார் வினிதா மோகன்.

இளையோர்களின் கைப்பிடித்து நூலகத்திற்குள் அழைத்துச்சென்று வாசிப்பின் இன்பத்தைப் பிள்ளைகளுக்கு அறிமுகம் செய்து வைக்கக் கோருகிற கதையும் மனம் கவர்கிறது. நம்மை அறிவுள்ளோராக. பண்பட்ட மனிதர்களாக மாற்றும் ஒரு அதிசயம் புத்தங்களுக்குள் ஒளிந்துள்ளது என இளவல்களுக்கு வழிகாட்டுகிறார் நூலாசிரியர். அறிவே அற்றம் காக்கும் கருவி என்ற நம் வள்ளுவப் பேராசானின் குறளை. நூலெங்கும் எதிரொலிக்கிறார் வினிதா மோகன்.

சமூகமாக. சுமூகமாக வாழ மனிதர்கள் கண்டுபிடித்த மிகத் திறன் வாய்ந்த கருவி அறம் தான் என்பார் என் அன்பிற்குரிய ஆசிரியர் ஜெயமோகன். கருணை, அறம். நேர்மை, இரக்கம். நீதியுணர்வு என நாம் சொல்வன அனைத்துமே மனிதனின் அடிப்படை இயல்புகளான தன்னலம். காமம். மூர்க்க குணங்களுக்கு எதிரானவை. ஆகவே அறம் சார்ந்த செய்திகள் சான்றோர்களாலும், நூலாசிரியர்களாலும் திரும்பத் திரும்ப
வலியுறுத்தப்படவேண்டிய தேவை இங்கு அதிகம் உள்ளது. பேரிலக்கியங்கள் அனைத்தும் அறப்பிரச்சார ஆக்கங்களே. அந்த வரிசையின் தொடர்ச்சியே என வினிதா மோகனின் கதைகள் என்ற இப்புனைவு நூலைக் கொள்ளலாம்.

காந்தியடிகள் பற்றிய, அம்பேத்கர் பற்றிய விவாதங்களைத் துவக்கி வைத்து அவர்கள் எழுதிய நூல்கள் மற்றும் அவர்களைப் பற்றிய தொடர் வாசிப்புகளுக்கும் வழிகாட்டுகிறார் வினிதா மோகன். I.A.S.,I.T.S., T.N.P.SC தேர்வுகள் பற்றிய செய்திகளும். Black Chain Technology போன்ற நவீன தகவல்களும், இளம்தலைமுறையினரின் தேடலுக்கான தூண்டுதல்களாக நிச்சயம் அமையும்.

கரூரின் காவிரியைப் போல, தெளிவாக மென்நடையில் சொல்லுமிடமெல்லாம் செழிப்பாக்கிக்கொண்டே செல்லுகிற, தன் கதைகள் சொல்லும் திறன் மூலம். மனம் கவர்கிறார் இந்நூலாசிரியர் வினிதாமோகன்.

நூல்பல காண்க என்று நட்புடன் வாழ்த்துகிறேன்.

மருத்துவர் க. கண்ணன்
கபிலா மருத்துவமனை, கரூர்.
முனைவர் க.கலா துணைவேந்தர், அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம், கொடைக்கானல். அணிந்துரை : சரியான சாட்டையடி "மங்கையராய் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட வேண்டுமம்மா!' என்னும் கவிமணியின் வாக்கிற்கிணங்க இப்பூவுலகில் அவதரித்த, பெண்மணிகள் யாவருமே மாதவம் செய்தவர்கள். அந்த வரிசையில் நமது நூலாசிரியர் "வினிதா மோகனும்' ஒருவர். இல்லறத்தைப் பேணுதலோடு தன் கடமையை நிறுத்திக் கொள்ளாது, படைப்புலகிலும் தடம் பதிக்க வேண்டும் என்னும் முனைப்போடு புறப்பட்டிருக்கும் அன்பு மகள் வினிதா மோகனுக்கு "படைப்புலகில் முத்திரை படைக்க, சித்திரைப் பெண்ணிற்கு சீர்மிகு சித்திரை வாழ்த்துகள்" ஒரு சிறந்த படைப்பென்பது படைப்பாளனின் ஆளுமையைப் பறைசாற்றும். அப்படைப்பானது சிறுகதை, நாவல், கவிதை, கட்டுரை என எந்தப் பரிணாமத்திலும் இருக்கலாம். அப்படிப்பட்ட அப்படைப்பானது, படைப்பாசிரியரின் முழு ஆளுமைத்தன்மையோடு மிளிரும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. அந்த வகையில் "வினிதா மோகனின்" சிறுகதை நூலான இத்தொகுப்பில் 15 கதைகளையுமே சீரிய சிந்தனையோடு படைத்துள்ளார். அனைத்துக் கதைகளுமே நமது நிகழ்காலத்தை நம் நெற்றிப்பொட்டில் அறையும் வண்ணம் எடுத்தியம்பியுள்ள விதமும், கதைத் தேர்வும் இச்சிறுகதை நூலுக்கு மேலும் அணி சேர்க்கின்றன. எதார்த்தமாகக் கதைப் பின்னலை அமைத்து, தான் சொல்ல வந்த விடயத்தைத் தெளிவாக எடுத்துரைக்கும் பாங்கும். சுருங்கச் சொல்லி விளங்க வைக்கும் அழகும் பாராட்டுதலுக்கும் போற்றுதற்கு உரியது. முதல் கதையான "பகுத்தறிவின் சிறப்பு" என்பதில் நம் அன்றாட வாழ்வில் நடக்கும், காலம் காலமாக ஊறிப்போன சமூக நிகழ்வைப் பகுத்தறிவுக் கண்ணோட்டத்துடன் நோக்கும் விதமாக அமைத்தது கதையின் சிறப்பம்சம் ஆகும். சமூகத்தில் மனிதர்களின் மூடநம்பிக்கைகளும் அதைப் பின்பற்றும் படித்தவர்களும் நிறைந்த இந்த உலகில் "நறுமுகை" கதாபாத்திரத்தின் வாயிலாக நூலாசிரியர் செய்தது சமூக, சமுதாயப் புரட்சி. குழந்தை பிறந்தால் தீட்டு பூப்பெய்தால் தீட்டு, இறந்த வீட்டில் தீட்டு என நம் சமூகத்தில் படித்த மக்களும் பின்பற்றும் மூடப்பழக்க வழக்கங்களுக்குச் சரியான சாட்டையடி இக்கதைக்கருவாகும். "அகத்தினியனின் அகம்" எனும் மனம்சார் உளவியல் ரீதியான சிறுகதையும் மாறுபட்ட கோணத்தில் படிப்போரை உயரிய சிந்தனைக்கு இட்டுச் செல்லுகிறது. "அர்த்தநாரீஸ்வரி" கதையில் நட்பின் புரிதலும் அழகும் வெளிப்படும் விதத்தில் நூலாசிரியர் பரிமளிக்கிறார். பயன்தூக்கார்" என்னும் கொரோனா நோய் தொடர்பான மனிதம் போற்றும் சிறுகதையும் "மயூரன்" எனும் கதாப்பாத்திரத்தின் வழியாகவும், "மனம் ஒரு கோவில்" என்னும் சிறுகதையிலும் "முகுந்தன்" என்னும் கதாபாத்திரத்தின் வழியாகவும், நூலாசிரியர் தன் மனக் கருத்தை முன்வைத்திருப்பதும் இந்நூலுக்குக் கூடுதல் சிறப்பு. இங்ஙனம் "கேள்வியே வேள்வியாய்", "திருமுகம் என்றால்", "இதயகர்ஜனை 'எனக் கதைகள் அனைத்திலுமே தனது நேர்மையான சிந்தனைகளை, சமூகம் தொடர்பான தன் ஆதங்கங்களைக் கருத்துகளாகத் தொடுத்து நேர்த்தியாக வெளிப்படுத்தியுள்ள வினிதா மோகனின் எழுத்தாற்றல், பாராட்டுதலுக்கும் வரவேற்புக்கும் உரியது. சம கால சிறுகதை எழுத்தாளர்களைப் போல 'காதல், காமம்' எனப் பயணப்படாமல் ஒவ்வொரு கதையையும் கருங்கல்லை உளி கொண்டு செதுக்கி சிற்பமாக்கும் சிற்பியின் முயற்சியையும் உழைப்பையும் கொண்டு சிறப்பாக வடிவமைத்திருக்கிறார், செதுக்கியிருக்கிறார். "கண்மூடிப் பழக்கமெல்லாம் மண்மூடிப் போக", என்னும் வள்ளலாரின் கூற்றுப்படி இச்சமூகத்தில் கண்களை மூடிக் கொண்டிருக்கும் பழக்கமும் போகட்டும். கண்களைத் திறந்தால் மட்டுமே காட்சி கிடைக்கும். அதுவே அகப்புற வளர்ச்சிக்கு வித்திடும். வள்ளல் பெருமானின் அடியொற்றில், இத்தகைய சமூகம் சார்ந்த ஆர்வலர்கள் எழுத்தாளர்களாக வலம் வந்தால் இன்றைய இளைஞர்களுக்கும், சமூகத்தில் உள்ள பலதரப்பட்ட மக்களுக்கும் சரியான பாதையைக் காட்டுவார்கள் என்பது திண்ணம். பட்டை தீட்டப்பட்ட வைரங்களாக ஜொலிக்கும் பதினைந்து சமூகம் சார் சிறுகதைகளைப் படைத்த அன்பு மகள் வினிதா மோகனுக்கு என் இதயக்கமலத்திலிருந்து வாழ்த்துப் பூக்களைத் தூவுகிறேன். தமிழ்கூறும் நல் உலகம் இவரின் எழுத்தாற்றலை சிறப்பிக்கும். வாழ்க வளமுடன் நலமுடன்!! என்றும் அன்புடன், முனைவர் க.கலா துணைவேந்தர் VICE CHANCELLOR Mother Teresa Women's University Kodaikanal

வினிதா மோகன்

"கர்ஜனை‌" நூல் பற்றி கவிஞர் ஜோ மல்லூரி காலத்தை மொழிபெயர்த்த கலைமகள்! வினிதா மோகன்! கனமழையைத் தாங்கிய குடையைப் போல. கனமான கதைகளைத் தாங்கிய மனஇழையோடு தமிழ் இலக்கியப் பரப்புக்கு - ஒரு தாக நதியாய் தாளகதி தப்பாத வேகத்தோடும் மோகத்தோடும் வந்து சேர்ந்திருக்கிறார் வினிதா மோகன்! அதிர்ந்து பேசாத ஆனந்த ராகத்தோடு நேரில் வார்த்தையாடும் வினிதா மோகன் - தனது கதைகளில் வாயிலாக நிறைய அதிர்வுகளோடு வந்திருக்கிறார். தனது முந்தானையில் முடிந்து வைத்திருக்கும் கதைகள் அல்ல இவை! ஆரூடம் கணிக்கிற குடுகுடுப்பைச் சத்தம் அல்ல! இந்தக் கதைகள்! மங்கல் வானத்து ஊமைக் கனவாய் - உதறப்பட்ட மானுடத்தின் விளிம்பு நிலை மாந்தர்களின் மன ஓட்டத்தை அவர்களின் வாழ்வியலை வடித்தெடுப்பது அவ்வளவு எளிதானதல்ல! அது ஒரு அரிதான அகழ்வு! 15 சிறுகதைகளை உள்ளடக்கிய இந்தப் படைப்பு காலத்தை வெல்லுகின்ற வாய்மையோடும் அதைவிட, நிச்சயமாக மானுடத்தை ஒரு புதிய விடியலுக்கு அழைத்துச் செல்கிற வீரியத்தோடு இருப்பதைக் காலம் சொல்லும். அன்றாடம் நம்மைச் சூழ்ந்து எத்தனையோ நிகழ்வுகள் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது. எதைப் பதிவு செய்வது என்பதே ஓர் அறிவுதான். வினிதா மோகன் தனது கூர்மையான பார்வையை தீர்க்கமான சிந்தனையோடு கதையாக்கி இருக்கிறார். அடர்த்தியான ஒரு மரநிழலில் தோழியோடு அமர்ந்து மனதைப் பரிமாறும் மகத்துவமான தருணத்தைப் போல, இந்தக் கதைகள் நம்மை ஈர்த்து நிற்கிறது. மனதில் வேர்த்து நிற்கிறது. வினிதா மோகன் எந்தக் கதையையும் நம் மனதுக்குள் திணிக்க முயற்சிக்கவில்லை! தூக்கணாங்குருவி கூடுகட்டுவதற்கு எவ்வளவு கவனக் காப்போடு குச்சிகளைப் பொறுக்கி வருகிறதோ, அத்தகைய இயல்புச் சிரத்தையோடு தனது கதைகளைக் களத்தில் இறக்கி வைத்திருக்கிறார். பெரும்பாலும் பெண்ணியப் படைப்பாளிகள் என்றாலே கண்ணீரும், கம்பலையுமான ஒப்பாரிக்குரல் ஒலிக்கும் என்கிற வரம்புகளை மீறி, எதைச் சமுகத்திற்கு பந்தி வைக்க வேண்டுமோ, 'அதை அளவுமீறாமல் தருவதில் அலாதிப் பிரியம் காட்டி, வெற்றி பெற்றிருக்கிறார். அர்த்தநாரீஸ்வரி கதையில் 'உணர்வுகளே நட்பின் ஆழத்தை ஓசையின்றி அழகாக்குகின்றன' என்கிற கவித்துவத்தோடு இழையோடி இருப்பதில், வினிதா மோகனின் விலாசம் தெரிகிறது. ஒரு பூவுக்குரிய மௌனமான பார்வையும் ஒரு பறவையின் கண்களில் இருக்கிற ஆகாய அளவும் - அலைகள் இல்லாத ஒரு நீரோடையின் நிதானமும் மொத்தக் கதைக்களத்தையே அழகாக்கி ஆரோகணம் செய்கின்றன. வினிதா மோகன் தனது எழுதுகோலால் மானுடத்திற்கான ஒரு புதிய இரத்த ஓட்டத்தை உருவாக்கி இருக்கிறார். ஒரு நீராழி மண்டபத் தின் ஈ.ரவாடையில் இதயம் நனையக் கதையாடி இருக்கிறார். பெருமளவு வார்த்தைகளை விரயமாக்காமல் கனப்படுத்தி இருக்கிறார். தானியங்களோடு தங்கத்துண்டுகளே கிடந்தாலும், பறவைகள் தங்களது தண்டுக் கால்களால், தங்கத் துண்டுகளைத் தட்டிவிட்டு, தானியங்களைத்தான் கொத்தித் தின்னும். அதைப்போல, வினிதா மோகன் தனது எழுதுகோலால், பருவக் கதைகளை எழுதிப் புகழ்பெற விரும்பாமல், மானுட உறவுகளைத் தூக்கி நிறுத்தும் தூய பணிக்கு தன்னைத் தத்தம் செய்திருக்கிறார். 15 கதைகளும் விதை நெல்லாக இருக்கிறது. மானுட நேயத்திற்கான மகசூலைக் காலம் அறுவடை செய்யும் என்பது திண்ணம். தமிழ் கூறும் நல்லுலகம் - வினிதா மோகன் என்கிற அருந்தமிழ் மகளை ஆரத்தி எடுத்து வரவேற்கும். இவரது சிந்தனையில் உதித்துள்ள இந்தச் சீர்வரிசைக்கு சமூகம் சாமரம் வீசட்டும். கழுகின் உயரத்திற்கு இவரது கதைகள் உயரட்டும். இவரை வாழ்த்தும் வரிசையில் தமிழன்னைக்கு அருகில் நானும் நிற்கிறேன். ஜோ மல்லூரி கவிஞர் நடிகர்
நீங்கள் ஒரு
எழுத்தாளர் என்றால்இங்கே கிளிக் செய்க

உங்கள் வாசகர்கள் எண்ணிக்கையை அதிகரிக்கவும் விற்பனையை கூட்டவும் ஒர் வாய்ப்பு.
உங்கள் வாசகர்கள் எண்ணிக்கையை அதிகரிக்கவும் விற்பனையை கூட்டவும் ஒர் வாய்ப்பு

நீங்கள் ஒரு
வாசகர் என்றாலஇங்கே கிளிக் செய்க

உங்களுக்கு பிரியமான எழுத்தாளரோடு தொடர்பு கொள்ளுங்கள். உங்கள் புத்தகத்திற்கான கூடுதல் மதிப்பினை செய்தி, காணொளி, கேட்பொலி மூலம் கைப்பேசி அல்லது கணினி வாயிலாக பெறுங்கள்.