மனதின் சாயல்

Start a discussion with your Author
எழுதியவர்

தீபிகா சுரேஷ்

வெளியிட்டது

ezhilini

வகை

கவிதைகள்

ஐஎஸ்பிஎன்

9789387681651

விளக்கம்

பூக்களுக்கு இதழ் உண்டென்று மட்டும் உங்களால் சொல்ல முடியும் அதற்கு உயிருண்டு அதோடு உரையாட முடியுமென்று அவள் சொல்வாள். அவள் வார்த்தைகள் வருட மட்டும் அல்ல வலியை துடைத்தும் எறிந்துவிடும்.. "'உண்மையில் நீயும் நானும் தேடும் ஒன்றை யாரும் தந்துவிடப்போவதில்லை... நம்மை தவிர" இவ்வரிகள் இம்சைக்கிறது உண்மையை உரக்க சொல்லி.... வாழ்த்துக்கள் அக்கா ஜெமி சரவணன் வர்ணஜாலம் உரிமையாள

உங்கள் நண்பர்களோடு பகிருங்கள்:

புத்தகம் வாங்க

நீங்கள் இந்த புத்தகத்தைப் படிக்கிறீர்கள் என்பதை மக்களுக்குத் தெரியப்படுத்துங்கள்

தீபிகா சுரேஷ்

எழுத்தாளர் பற்றி: தென்காசி மாவட்டம் புளியங்குடியைச் சார்ந்த தீபிகா சுரேஷ் தனது பள்ளிப்படிப்பை சொந்த ஊரில் முடித்தார். திருவனந்தபுரத்தில் உள்ள அனைத்து புனிதர்கள் கல்லூரியில் இளங்கலை பட்டம் பெற்று தொலைதூரக்கல்வி வழி சென்னை பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ பயின்று தனியார் வங்கியில் பணியாற்றுகிறார்..

அறிமுகம்:
மாதிரி பக்கங்கள்:
பொருளடக்கம்:
கூடுதல் மற்றும் துணைப் பொருள்:
இங்கே கிளிக் செய்க

பதிவுகள் இல்லை

Karthi04-Mar-2020 10:35:42
குல்மொகர் மலரும் காலம்

தொடர்ச்சியாக இரண்டு சூடான தேநீர்களைப் பருகுகிற சந்தர்ப்பங்களுக்குள் வாசித்துவிடலாம் 'மனதின் சாயல்' கவிதைத் தொகுப்பை.நான் மூன்று காஃபிகள் எடுத்துக்கொண்டேன்.தேநீருக்கோ காஃபிக்கோ சர்க்கரை போட மறந்திருந்தாலும் சொற்களின் தித்திப்பு நம் ஞாபகமறதியை நமக்கு உணர்த்தப்போவதில்லை.

காதல் பிறந்திருக்கிறது இனிப்பு எடுத்துக்கொள்ளுங்கள் என்கிறது ஆண்வெளி.காதல் இறவாதிருக்கும் இனித்தே இருங்கள் என்கிறது பெண்வெளி.இப்பெண்மொழி.கரைந்திடும் இனிப்பென்பது உள்ளங்கைக்குள் ஒரு சிறுதுண்டு.கரையாத இனிப்பென்பது உள்ளத்துக்குள் அலையாடும் கடல்.இது உப்புக்கடலல்ல.சர்க்கரைக்கடல்.அதிலும் தென்காசி பனைமர நிலத்திலிருந்து எழும் நாட்டுச்சர்க்கரை கடல்.

இடம்பெற்றவை அத்தனையும் தன்குறிப்பு மட்டுமல்ல.இது பெண்குறிப்பு,மண்குறிப்பு,உன்குறிப்பு,என்குறிப்பு.தன்னெழுச்சியில் இருக்கிறது பெண்எழுச்சி.பெண் எழுச்சியில் இருக்கிறது மண்எழுச்சி.மண் என்பது மண்மீது அசைவாடும் உயிர்ப்பான அறங்களத்தனையும்தான்.அற்புதங்களத்தனையும்தான்.

அங்குசம் யானையை அடக்கியதும் பேருருவத்தையே கட்டுப்படுத்திய பெருமிதம் அந்தக் கூர்முனையின் கைகளுக்கு.அன்பே சகலத்தையும் அசைக்கும் என்கிற புரிதலும் தீர்க்கமும் தீபிகா சுரேசுக்கு.சகலம் என்பது மௌனங்களால் ஆழமுறும் மலைகளும்,ஆழங்களுள் மௌனமுறும் பெருங்கடல்களும் மட்டுமல்ல, அத்தனை பிரம்மாண்டங்களும்தான்.

சொல்பேச்சு கேளாத மனம்தான் நம் யாவருக்குமே வாய்த்திருக்கிறது.இருந்தாலும் பிடித்தமான மனமொன்றின் சொல்மட்டும் கேட்கும் மனம் வாய்த்தல் எத்தனை அற்புதம் நிறைந்தது.இதுகொஞ்சம் சுயநலம்போல் தோன்றினாலும் இதுதான் காதலுக்கான பொதுநலம்.சிதறும் அருவியை அன்னாந்துபார்,மென்மழையை மேல்நோக்கி ரசி என்கிற குரலின் ஈர உத்தரவை யாருக்குத்தான் பிடிக்காது.இது இயன்றவரை இயற்கையாதல்.இயற்கையோடு இருப்பாதல் என்கிற தீபிகா சுரேசின் தத்துவம்.தத்துவத்தை தனதாக்கலே காலமிதில் மகத்துவம்.

எல்லைகளையும் இல்லைகளையும் தானே தீர்மானிக்கும் பறவைதான் இன்னும் இன்னுமென மேல்நோக்கிப்பறக்கும்.தட்பவெட்பநிலைக்கேற்ப தன் செட்டைகளைத் தகவமைத்துக்கொள்ளும்.மீச்சிறு சிறகுகளை மட்டுமே வைத்து வைராக்கியமெனும் காற்றின் கிளைகளில் இளைப்பாறி கண்டங்களைக் கடக்க முடியும்.வாழ்வின் பொருளை தலைமுறைகளுக்கு ஊட்டிவிட்டு அவைகளுக்கான பறந்தலையும் காலத்தில் தாய்நிலம் திரும்பவும் முடியும்.

இதில் இடம்பெற்ற நிறைய கவிதைகளை அழகான சரணங்களும் பல்லவியும் நிறைந்த பாடல்கள் என்றே சொல்வேன்.இசையோடு இந்த வரிகள் எழும்போது தமிழ்த்திரைக்கு இன்னுமான கூடுதல் பாடலாசிரியை கிடைத்திருக்கிறார் என்றே பாட்டுச்சமுதாயம் வாழ்த்தி வரவேற்கும்.கவிதை மொழிக்குள் பாட்டு மொழிக்கான சொற்சித்திரங்களும் ஊடாக இருப்பதே இக்கவிதைத்தொகுப்பை தனித்துவப்படுத்துகிறது.மிகப்பிடித்தமான மிகுதியான அடிக்கோடிட்ட வரிகளை இங்கே உதாரணத்திற்கு என்று கொண்டு வர நினைத்தால் அவ்வடிக்கோட்டு வரிகளின் நீளம் ஜெட்புகையைப் போல நீண்டுகொண்டே செல்லுமென்பதால் திட்டமிட்டே தவிர்த்திருக்கிறேன். கீழே நின்று ரசிப்பது போல் ஆகிவிடும் என்பதால் இந்த தவிர்த்தலை செய்தேன். உங்களை அந்த ஜெட் விமானத்தில் ஏற்றி பயணிக்க வைப்பதே என் அன்பென்றும் சொல்கிறேன்.வாசித்து பயணிக்கவிருக்கும் அந்த விமானத்தில் நீங்கள் மட்டுமே இருக்கப்போவதில்லை புத்தரும்,ஊர்த்திருவிழா அம்மனும்,செல்வ விநாயகனும்,இன்னுமான பெயர் உள்ளவர்களும், நீங்கள் காதலிப்பவரும்,உங்களைக் காதலிப்பவருமென நிறையப் பேர் பயணிப்பார்கள்.வான்விட்டு நிலமிறங்கியதும் விமானத்தை ஓட்டி வந்த தீபிகா சுரேசுக்கு நம் பிரியங்களைப் படையலாக்குவோம்.

எனக்கு கொன்றை பிடிக்கும்.கொட்டும் மழை பிடிக்கும்.கொட்டும் மழையில் கொன்றையின் கீழ்நின்று மஞ்சள் நீராடுபவரை இன்னும் அதிகமாக பிடிக்கும்.அவர் பாத நரம்புகளுமே அப்படியே கொன்றையின் வேர்களின் சாயல்தான்.கைகுலுக்கல் என்பதும் காதல் என்பதை இதில்தான் வாசித்தேன்.கூடவே,இடைவெளி இருப்பினும் கைகுலுக்க முடியும் என்பதையும்,இடைவெளி என்பது மனம் கலப்பதற்கான வெளி என்பதையும்.

மனதின் சாயல் என்பதை ஒரு சிவப்பு ஆர்ட்டினுக்குக் கீழே கொஞ்சம் கறுப்பாய் நேரமாக நேரமாக கடிகார திசையில் சுழலும் நிழலென்றுதான் நினைத்திருந்தேன் இத்தொகுப்பை நேசித்து வாசிக்கும் முன்பு வரை.இந்த மனதின் சாயல் பிரதிபலிப்பது வாழ்ந்த வாழ்வை, வாழ்ந்து கொண்டிருக்கும் வாழ்வை,வாழவிருக்கும் வாழ்வை.தமிழிலக்கியச் சூழலில் இம்மூன்றையும் ஒருங்கே கொண்டிருக்கும் கலைஆக்கம் மிகக்குறைவு.அம்மிகக்குறைவோடு ஒரு எண்ணைக் கூட்டியிருக்கிறது இத்தொகுப்பு.இது ஒரு கூடுதல் துளிதான் என்றாலும்,துளியில் இருந்துதானே உயிர் தோன்றிற்று.துளியிலிருந்துதானே உலகம் தோன்றிற்று.துளியிலிருந்துதானே உன்னதங்கள் தோன்றிற்று.

மழைத்துளிகள் நிரம்பிய பேனாவில் நிறைய கவிதைகள் எழுதப்பட்டிருக்கிறது என்பதை இத்தொகுப்பின் நிறைய பக்கங்களில் உள்ள தீரா ஈரம் வைத்து உணரமுடிகிறது.ஆம்,தீபிகா சுரேசு சொல்வதைப்போல தீரா ஈரம்தான் நேசமென்பதுமே.
உருவமில்லாத ஒரு காதலோடு முற்றும் பழக்கமில்லாதோரின் உலகத்தில் வாழ்தலின் பெயர் தனிமையல்ல.வரம்.பரிச்சயமான உலகம் ஆச்சரியமான பரிசுகளை வைத்திருக்காது ஒருபோதும்.கட்டுடைத்து விடுதலையாதலென்பது உங்கள் அபத்தமான சம்பிரதாயங்களை தலைமுழுகுதல் என்கிற குரலில் எழும் உண்மை,ரௌத்திரம்,தந்தையின் மகள்களுக்கும், பெரியாரின் பெயர்த்திகளுக்குமே உரித்தானது.நூற்றி இருபது கோடி கொடுத்தாலும் கிடைக்காத அருமருந்து இது.மனைவியின் சங்கடம் தீர்க்காத புத்தனையும் கேள்விக்குள்ளாக்கும் நவீனஞான புத்தரியின் போதனையும் இது.சுயம் சுடும் நேரம் சூரியனாகச்சொல்லும் இதுவரை கேட்டிடாத நீதிக்கதையின் கடைசிவரியும் இது.

நதி இழுத்துச்சென்ற பூ இனித் திரும்பாது எதிர்த்திசையில் நீந்தி.தெரிந்தோ தெரியாமலோ வளர்ந்து தொலைத்த நாம் போய்ச்சேர முடியாது பால்யத்திற்கு.நினைவில் இருக்கும் காதல் இனிக்கவும் செய்யலாம் கசக்கவும் செய்யலாம்.எல்லாம் இப்படித் திரும்பாத காலத்தில் வாழும் நம்மால் கருவறைக்குத் திரும்புதல் என்பதையும்,'இருளென்பது மிகக்குறைந்த ஒளி'யென்று பாரதி சொன்ன காரணத்தால் அறையிருட்டில் அமர்ந்து அதையும் உணரமுடியாதுதான்.ஆனாலும் கருவறையின் வாசத்தை உணரமுடியும் மனதின் சாயலை வைத்திருப்பதன் மூலம்.குல்மொகர் மலரும் காலமென்பது பூ பூக்கும் காலம் மட்டுமில்லை‌.இறவாதிருக்கும் காதல் மலரும் காலமும்தான்.எண்பத்தெட்டு பக்கங்களை நான் மீண்டும் விழிமூடி அசைவாட வேண்டும்.நான் இச்சொல் மழையில் நனைந்த குளிர்ச்சியிலிருந்து மீளவேண்டியிருப்பதால் நான்காவது காஃபிக்கு ஆயத்தமாகப்போகிறேன்.நீங்கள் முதல் தேநீருக்கோ முதல் காஃபிக்கோ ஆயத்தமாகுங்கள் தீபிகா சுரேசின் 'மனதின் சாயலோடு'.இனி குல்மொகர் மலரும் காலம்.
--கார்த்தி

#மனதின் சாயல்' தொகுப்பை முன்வைத்து
#தீபிகா சுரேஷ்
#எழிலினி பதிப்பகம்

தீபிகா சுரேஷ்

அன்பின் நன்றிகள் கார்த்திக் பெருமை பெற்றது "மனதின் சாயல்"... பெருமிதத்தில் தீபிகா சுரேஷ் ...மகிழ்ச்சி..Stay connected

Olivannan G

மிக தேர்ந்த மதிப்புரை. ஆழமான அறிவார்ந்த விமர்சனம் திரு கார்த்தி
Maria jeyarakkini04-Feb-2020 05:33:51
தீபிகா சுரேஷின் (பெண்ணின் )மனதின் சாயல்
மிக பொருத்தமான தலைப்பு.
அலுவலிலும் அடுப்பறையிலும் உறங்கிபோன பெண்களின் ஆசைகள் தாபங்கள் கேள்விகள் கோபங்கள் சொல்லமுடியாமல் தவிக்கும் ஏக்கங்கள் பலவற்றை குழைத்து வர்ணனைகளால் வண்ணம் தீட்டிய ஈடில்லா வெளியீடு.. பெண்களின் மனம் ஆழம்தான் அந்த ஆழத்தில் எத்தனை எதிர்பார்ப்புக்களும் ஏமாற்றங்களும் ஏச்சுக்களும் புதைந்துள்ளது என தூசிதட்டி பார்க்க சிறந்த புத்தகம்.
வேறோடு பிடுங்கி நடப்பட்ட ஆலமரம் ஒன்று வேரறுந்தபின்னும் அதை உயிர் வாழ வழி செய்யும் விழுதுகளின் வேர்கள் தான் அவள் எழுத்துக்களும் அழகிய பெண்பிள்ளையும்..
பெண் மனதின் கருத்துக்களை தேக்கி வடிகட்டி சுடசுட அனைவரும் படித்து பருக வேண்டிய சிறிய கோப்பையின் சுவைமிகு தேநீர்✨

தீபிகா சுரேஷ்

மகிழ்ச்சி... அன்பும் நன்றியும் பிரியங்களும்♥️♥️♥️

Olivannan G

சிறப்பான தங்களுடைய முதல் கவிதை தொகுப்பு மனதின் சாயல் எங்கள் பதிப்பகத்தின் வாயிலாக வெளியிட்டமைக்கு மகிழ்ச்சியும் நன்றிகளும் தொடர்ந்து மென்மேலும் பல புத்தகங்கள் நீங்கள் எழுதவேண்டும்.

Karthi

மிக அழகான ஈர்ப்பான உயிர்ப்பான விமர்சனம்.வாழ்த்துகள் மற்றும் ப்ரியங்கள் மரியா அவர்களுக்கு
No feeds available
நீங்கள் ஒரு
எழுத்தாளர் என்றால்இங்கே கிளிக் செய்க

உங்கள் வாசகர்கள் எண்ணிக்கையை அதிகரிக்கவும் விற்பனையை கூட்டவும் ஒர் வாய்ப்பு.
உங்கள் வாசகர்கள் எண்ணிக்கையை அதிகரிக்கவும் விற்பனையை கூட்டவும் ஒர் வாய்ப்பு

நீங்கள் ஒரு
வாசகர் என்றாலஇங்கே கிளிக் செய்க

உங்களுக்கு பிரியமான எழுத்தாளரோடு தொடர்பு கொள்ளுங்கள். உங்கள் புத்தகத்திற்கான கூடுதல் மதிப்பினை செய்தி, காணொளி, கேட்பொலி மூலம் கைப்பேசி அல்லது கணினி வாயிலாக பெறுங்கள்.